TV

6807407510_87e96e8176_b

திருப்பூர், 07.02.19:

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள், காவிரி தீர்த்த கும்பம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்தக் கோயிலின் சன்னிதானத்தில் ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ எனும் பெயரில் ஒரு கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுடைய கனவில் தோன்றும் சிவன்மலை முருகன், குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவாராம்.

இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி, தனது கனவில் வந்து முருகன் சொன்ன அந்த பொருளைப் பற்றி கூறுவார். அதைத்தொடர்ந்து, கோயில் சன்னிதானத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்கள்போட்டு சுவாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளை நிற பூ வந்தால் மட்டுமே அந்தப் பொருள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உத்தரவு பெட்டிக்குள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். இப்படி வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது.

இன்னொரு பக்தரின் கனவில் முருகன் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, அந்தப் பொருள் பெட்டிக்குள் இருக்கும். அந்த வகையில் இதற்கு முன்பு, கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி, உலக உருண்டை, சங்கிலி, அருகம்புல், மிளகு, கீழாநெல்லி வேர் என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பதுடன், நாட்டின் நல்லது, கெட்டதுக்கும் குறியீடாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த பக்தர் பாஸ்கரன் என்பவரின் கனவில் தோன்றிய சிவன்மலை முருகன், உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைத்து பூஜை செய்யும்படி கூறியுள்ளார். இதுகுறித்து பாஸ்கரன், கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்த நிலையில், கோயிலில் பூ போட்டு பார்த்து வெள்ளை நிற பூ வந்ததால், ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த அம்பு அகற்றப்பட்டு, ஒரு கும்பத்தில் காவிரி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது பற்றி பக்தர்கள் கூறுகையில், “சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளால் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2004ம் ஆண்டு தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்டது. அந்த ஆண்டுதான் சுனாமி ஏற்பட்டு நாடு பெரும் அழிவைச் சந்தித்தது. தற்போதும் தண்ணீர்தான் வைக்கப்பட்டுள்ளது. இது, சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகபோகத்தான் தெரியவரும்” என்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.