TV

6807407510_87e96e8176_b

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக சார்பில் நடத்திய போராட்டத்தில், பாரத் மாதா கீ ஜே முழக்கம் எழுப்பியபடி செருப்பால் அடிக்க முயன்ற பாஜக பெண் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை கைது செய்வதை கண்டித்து மதிமுக தொண்டர் ஒருவர் மின்கோபுரத்தில் ஏறி போராடியதால் பரபரப்பு நிலவியது.

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அந்தக்கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். கஜா புயல், காவிரி உள்ளிட்ட தமிழக வாழ்வாதார பிரச்னைகளில் பிரதமர் மோடி தமிழத்துக்கு துரோகம் செய்ததாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டிய இந்த பொராட்டத்தில் கருப்புக்கொடிகளுடன் நூற்றுக்கணக்கனோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் வைகோ பேசிக்கொண்டிருந்த போது, பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டபடி வந்த பாஜகவைச் சேர்ந்த சசிகலா என்பவர் போராட்டக்காரர்களை செருப்பால் அடிக்க முயன்றுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மதிமுக தொண்டர்கள் சசிகலாவை தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. மேலும் கற்கள் வீசியதில் மதிமுகவினரின் கார் கண்ணாடி உடைந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த சசிகலாவை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் சசிகலா மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தின் போது காவல்துறையினர் கைது செய்ய முயன்றதால், வைகோ 3 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகர் என்ற மதிமுக தொண்டர், மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் வைகோ வேண்டுகோளை ஏற்று அரை மணி நேரத்துக்குப் பின்னர் திலகர் கீழே இறங்கினார்.

இதற்கிடையே தொண்டர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:

சுதந்திர இந்தியா கண்டிராத துரோகங்களை பிரதமர் மோடி செய்துள்ளார். காவிரி, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகளில் தாங்க முடியாத துரோகங்களை மத்திய அரசு செய்துள்ளது, சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்தை வஞ்சித்த பச்சைத் துரோகி பிரதமர் மோடி என தெரிவித்த அவர், மேலும் வைகோவை சீண்டி பார்க்காதீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.

மோடி மீது எனக்கு தனிப்பட்ட எந்த பகையும் இல்லை, தமிழகத்தை அழிக்க நினைப்பதால் எதிர்க்கிறேன். தான் இந்த மண்ணின் வேலைக்காரன், உயிருள்ள வரை தமிழக மக்களின் உரிமைக்காக போராடுவேன். மத நல்லிணக்கத்தை கெடுக்க இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கின்றன. மத மோதலை உருவாக்கி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற இந்துத்துவா அமைப்புகள் முயற்சி செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அணை பாதுகாப்பு மசோதா வந்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும். இந்த மசோதா வந்தால் சோவியத் யூனியன் போல இந்தியா சிதறும் என கூறிய அவர், மதிமுகவை உயிராக நேசிப்பதாகவும், உயிரை விட தமிழக மக்களை நேசிப்பதாகவும் தெரிவித்தார். இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த போராட்டத்துக்குப் பின்னர், கருப்புக் கொடி போராட்டம் நடத்திய மதிமுகவினர் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே திருப்பூரில் கருப்புக் கொடி காட்ட வந்த திராவிடர் கழகத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த ராமசாமி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பிரதமர் மோடி வருகைக்கு ஆதரவாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் காவிக்கொடி வரவேற்பு கூட்டம் நடத்தினர். அப்போது கருப்புக்கொடி போராட்டம் நடத்திய மதிமுக கொடியை எரித்து கண்டனம் தெரிவித்தனர்.Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply