
கோவை 11.02.19
கோவையில் வழக்கறிஞர் மிரட்டுவதாக கூறி பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகளுடன் மனு அளிக்க வந்த பெண் ஒருவரின் வாய் மஞ்சள் நிறத்தில் இருந்துள்ளது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், அது பற்றி விசாரித்தபோது, தான் சாணி பவுடர் என்ற விஷமருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அங்கிருந்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அப்பெண்ணின் பெயர் மகேஸ்வரி என்பதும், அவரது கணவர் மகேஷ்குமார் என்பவரின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மகளுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சாக்ரடீஸ் என்ற வழக்கறிஞரும், பூபதி கண்ணன் என்பவரும் இணைந்து, தங்களது சொத்தை எழுதி கொடுக்க வலியுறுத்தி மிரட்டுவதாகவும், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்த போதும் நடவடிக்கை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து மனு அளிக்க வந்த இடத்தில் விஷமருந்தியதாக அவர் தெரிவித்ததை தொடா்ந்து, போலீசார் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மனு நீதி நாள் முகாமிற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில், பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.