TV

6807407510_87e96e8176_b

கோவை, 15.02.19:

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தற்போது வரை ஓய்வூதியம் வங்கியில் செலுத்தப்படாததால் கோவை அரசுபோக்குவரத்து தலைமை பணிமனை அலுவலகத்தை முற்றுகையிட்டு  குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசுபோக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஓய்வூதியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஓய்வூதியம் வழங்கப்படாமல், கழக நிர்வாகம் இழுத்தடித்து வந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை தொடர்ந்து பத்தாம் தேதிக்குள் ஓய்வூதியம் வங்கியில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுமுழுமையாக அமலாக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் நிர்வாகம் தங்கள் இஷ்டத்திற்கு ஓய்வூதியத்தை செலுத்துவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

அரசுபோக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளது. இக்கோட்டத்தின் தலைமை பணிமனை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது. அரசுபோக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 7 ஆயிரம் ஊழியர்கள் இக்கோட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெற்றுவருகிறார்கள்.

இந்நிலையில் கோவை கோட்டத்திற்குட்பட்ட ஓய்வூதியர்களுக்கு 15 ஆம்தேதி ஆனபிறகும் ஓய்வூதியம் வங்கியில் கழக நிர்வாகம் செலுத்த வில்லை. இதனையடுத்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தலைமை பணிமனைக்கு அரசுபோக்குவரத்து கழக ஓய்வூபெற்ற ஊழியர்கள் குடும்பத்தோடு காலை முதல் திரளதுவங்கினர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தலைமை பணிமனையில் வாயிற்கதவு மூடப்பட்டு ஓய்வூதியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பணிமனையில் இருந்து பேருந்துகள் வெளியே வரவும், வெளியில் இருந்து பேருந்துகள் உள்ளே செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் அரசுபோக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் ஜி.பழனிச்சாமி, பொதுச்செயலாளர் பி.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் சேதுராமன், கிருஷ்ணராஜ், கருப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினார். இதனையடுத்து மற்ற அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வங்கியில் வரவு வைக்கப்படும் என உறுதியளித்தனர். ஓய்வூதியர்களோ வங்கியில் வரவு வைத்தவுடன் எங்களுக்கு குறுஞ்செய்தி வரும் இதனையடுத்து நாங்கள் வீட்டுக்கு செல்கிறோம் என பணிமனை வளாகத்திலேயே அமர்ந்து உள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற நல அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், போக்குவரத்து கழக நிர்வாகம் எங்களுக்கு பிச்சை போடவில்லை. மாறாக எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படும் ஓய்வூதியத்தைத்தான் உரிய தேதியில் வழங்க வேண்டும் என்று கேட்கிறோம். கடந்த 8 ஆம்தேதியன்று ஓய்வூதியர்கள் சிலர் நிர்வாகத்திடம் எப்போது ஓய்வூதியம் தருவீர்கள் என்று கேட்டதற்கு பத்தாம்தேதி இரவு 11.55வரை நேரமிருக்கிறது என்று நக்கல் அடித்துள்ளார்கள். ஆனால் இப்போதுவரை ஓய்வூதியம் வழங்கவில்லை.

கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களின் ஈரோடு, நீலகிரியில் உள்ள ஒரு பகுதியினருக்கு மட்டுமே ஓய்வூதியம் வங்கியில் செலுத்தியுள்ளனர். மற்றவர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஆளுமையற்ற அதிகாரிகளை வைத்து கழகத்தை நடத்துவதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியம் வங்கில் வரவு வைக்கும்வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என உறுதியோடு தெரிவித்து வந்துள்ளோம். அதனையே செய்ய இருக்கிறோம் என்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.