TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 25.02.19:

போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இந்தியா சார்பில் இலங்கையில் 13.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 115 வீடுகள், நேற்று (24ம் தேதி) பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இலங்கையில் நடைபெற்ற போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 13.5 கோடி ரூபாய் செலவில் 155 புதிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று (24ம் தேதி) இந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கான விழா, உள்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தித்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவி தூதர், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், கே.கே.பியதாஸ் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1905 சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிலும், 505 சதுரஅடி பரப்புகொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் ‘பசுமை கிராமங்கள்’ எனும் அரசின் திட்டத்தின் கீழ் கூடுதல் வசதியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. புதிய வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்திய தூதர் தரஞ்ஜித் சிங் வாழ்த்து தெரிவித்து, காணி உறுதிபத்திரம் வழங்கி பேசுகையில், “இந்தியா, 5,000 கோடி ரூபாய் செலவில் இலங்கைக்கு வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 63,000 வீடுகளில் 47,000 வீடுகள் ஏற்கெனவே கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசுகையில், “இந்த திட்டத்தை செயல்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கு, இலங்கையின் முன்னேற்றம் மீதான முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இச்செயல் இருக்கிறது. இதேபோன்று இந்தியா – இலங்கை மக்களுக்கு இடையேயான நட்புறவு அமைதியாகவும், வளமாகவும் தொடர வேண்டும்” எனக் கூறினார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply