TV

6807407510_87e96e8176_b

பெங்களூர், 28.02.19:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்களும், ராகுல் 47 ரன்களும், தோனி 40 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் 4 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், தோனியும் 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்தனர். இருவரும் போட்டி போட்டு சிக்ஸர் அடித்தனர். இதில் விராட் கோலி 6, தோனி 3 சிக்ஸர்கள் விளாசினர்.

பின்னர், 191 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 22 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்தது. இருப்பினும், ஷார்ட், மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்ட நிலையில், ஷார்ட் 40(28) ரன்னில் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து அதிரடியில் இறங்கிய மேக்ஸ்வெல் சிக்ஸர் மழை பொழிந்தார். அதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகமாக உயர்ந்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர் அனைவரது பந்துகளை அவர் அடித்து நொறுக்கிய மேக்ஸ்வெல், அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 194 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது:

இது மிகவும் குறுகிய தொடர். பேட்டிங், பந்துவீச்சு பீல்டிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டது. இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணி முழு தகுதியானது தான். 190+ ரன்கள் என்பது டி20 போட்டிகளில் போதுமான இலக்கு தான். ஆனாலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் ஆஸ்திரேலிய அணி மிக எளிதாக வெற்றி இலக்கை அடைந்துவிட்டது. மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடினார். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாகவே வீரர்களை மாற்றி கொண்டே இருக்கிறோம். இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று அறிந்து கொள்வே அனைத்து வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.