TV

6807407510_87e96e8176_b

கிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் பேசும்போது கிறிஸ்து பிறப்பு, புனித வெள்ளி, உயிர்ப்பு, விண்ணேற்பு, குருத்தோலை தினம் என விழாக்கள் நம்முடைய நினைவுக்கு வருகின்றன. பெரும்பாலும் நம்முடைய நினைவுக்குள் வராத நாள் சாம்பல் புதன்.

இந்த சாம்பல் புதன் என்றால் என்ன ?

உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) நாற்பது நாட்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கின்றனர். தவக்காலம் என்பது நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கொள்ளலாம். பழைய ஏற்பாடுகளில் எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் தவத்தைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. எனவே இது கிறிஸ்துவின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது இல்லை என்பதும், பழைய வழக்கத்திலிருந்து பெறப்பட்டதே என்பதும் உறுதியாகிறது.

இது கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்கத் திருச்சபையில் அன்றைய தினத்தில் பாதிரியார் மக்களுடைய நெற்றியில் “மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே” என்று கூறி சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார். இயேசு சிலுவை மரணத்தை சந்திக்கும் முன் எருசலேமிற்குள் நுழைந்த தினத்தில் மக்கள் ஒலிவ மரக் கிளைகளை அசைத்து அவரை வரவேற்றார்கள். அந்த நாளே இன்றைய திருச்சபையில் “குருத்தோலை தினம்” என கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் குருத்தோலைகளைப் பிடித்து பவனிகள், கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஆலய கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் ஓலையே அடுத்த ஆண்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு, “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் பூசப் பயன்படுகிறது. பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து மனம் கசிந்து சாம்பலை உடலெங்கும் பூசி மேனி அழகைக் குறைத்துக் கொண்டும், கோணியை ஆடையாய் உடுத்தி ஏழ்மைக் கோலம் பூண்டும், தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் நீட்சியாகவே “சாம்பல் புதன்” தினத்தில் நெற்றியில் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது.

நெற்றி என்பது மனிதனுடைய முழுமையைக் குறிப்பதாக விவிலியம் கோடிட்டுக் காட்டுகிறது. நெற்றியில் பூசப்படும் சாம்பல் மனிதனை முழுமையாக இறையில் சரணடைய வைக்கிறது. நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது எனும் திருவெளிப்பாடு வசனம் நெற்றி குறித்த விவிலியப் பார்வையை விளக்குகிறது. இயேசு நாற்பது நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் வனாந்தரத்தில் நோன்பு இருந்த நிகழ்ச்சி விவிலியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் அந்த அனுபவத்தில் இணைகின்றனர்.

தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம். இந்த காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், உணவு, கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் பணத்தை ஏழைகளுக்கு வழங்குவதை பலரும் கடைபிடிக்கின்றனர். சிலர் வெள்ளிக்கிழமை தோறும் அன்னதானம் இடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். நோன்பு இருப்பது பிறருக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்கிறார் இயேசு. நோன்பு இருப்பதை பெருமைக்காகவும், புகழுக்காகவும், சடங்கிற்காகவும் செய்யாமல் சுய விருப்பத்தோடும் இறைவனில் சரணாகதி அடையும் மனநிலையுடனும் செய்ய வெண்டுமென்பதே இறைவனின் விருப்பமும் போதனையும்.

இறைவனின் அருளைப் பெற விழைபவர்கள் தங்களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறைவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்தல் அவசியம். அதையே சாம்பல் புதன் நினைவூட்டுகிறது. நெல்லை மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயர் ஜீடு பால்ராஜ் பங்கேற்று இறையுரையாற்றியானார்.வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மக்களுக்கு சாம்பலால் சிலுவை வரைந்து அவர்களை தவக்காலத்திற்கு ஆயத்தப்படுத்தி ஆசீர்வாதம் செய்தார்.திருப்பலியில் ஏராளமானவரகள் கலந்து கொண்டனர்.Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply