TV

6807407510_87e96e8176_b

திருப்பூர், 06.03.19:

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுவதால், ‘அதர்மம் ஒழிந்து, நன்மை பெருகும்’ என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில், புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்தக் கோயிலின் சன்னிதானத்தில், ‘ஆண்டவன் உத்தரவு பெட்டி’ எனும் பெயரில் ஒரு கண்ணாடி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பக்தரின் கனவில் தோன்றும் சிவன்மலை முருகன், குறிப்பிட்ட ஒரு பொருளை அந்தப் பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவாராம். அப்படி இதில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள், சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையோ, அல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாகவோ அமையும் என்பது பக்தர்களின் பல்லாண்டு கால நம்பிக்கை.

முருகனிடம் உத்தரவு பெற்ற பக்தர், தனது கனவில் முருகன் சொன்ன அந்த பொருளைப் பற்றி கோயில் நிர்வாகத்திடம் கூறுவார். அதைத்தொடர்ந்து, சன்னிதானத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்கள்போட்டு சுவாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளை நிற பூ வந்தால் மட்டுமே அந்தப் பொருள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படும். இப்படி வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது. இன்னொரு பக்தரின் கனவில் முருகன் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, அந்தப் பொருள் பெட்டிக்குள் இருக்கும்.

கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த பக்தர் பாஸ்கரன் என்பவரின் கனவில் தோன்றிய சிவன்மலை முருகன், உத்தரவு பெட்டியில் தண்ணீர் வைத்து பூஜை செய்யச் சொல்லியுள்ளார். இதுகுறித்து அவர், கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து, ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த அம்பு அகற்றப்பட்டு, ஒரு கும்பத்தில் காவிரி தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சந்திரபுஷ்பம் (50) என்ற பக்தரின் கனவில் தோன்றிய சிவன்மலை முருகன், உத்தரவுப் பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவு கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று (5ம் தேதி), வெள்ளியில் செய்யப்பட்ட வேல், உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

 

இதுகுறித்து கோயில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது;

“கடவுள் முருகன் கையில் உள்ள வேல், அதர்மம் மற்றும் தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் இடம் பெற்றுள்ளதால், நாட்டில் அதர்மம், தீமை அழியும்; நன்மை பெருகும்” என அவர் தெரிவித்தார்.

வேல் வழங்கிய பக்தர் சந்திரபுஷ்பம் கூறியதாவது;

“திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். கடந்த 25 நாட்களுக்கு முன்பு எனது கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘என் சன்னதியில் உள்ள பெட்டியில் வேல் கொண்டுபோய் வை’ எனக்கூறி மறைந்தார். இதுகுறித்து பலரிடம் விசாரித்து, சிவன்மலையில் பெட்டி இருப்பதை அறிந்து, வேல் கொண்டு வந்தேன். நான், இதற்கு முன்னர் சிவன்மலை முருகன் கோயிலுக்கு வந்ததில்லை” என்றார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.