TV

6807407510_87e96e8176_b

மொஹாலி, 10.03.19:

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெஹாலியில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், அடுத்து தொடங்கிய ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து தொடங்கிய 3-வது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆட்டத்திலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 20 ஓவர் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, கேதர் ஜாதவ், டோனி ஆகியோர் பேட்டிங்கிலும், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் ஆல்ரவுண்டர் வரிசையில் தமிழக வீரர் விஜய் சங்கர் சிறப்பாக செயல்படுகிறார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அவரது நேர்த்தியான பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது.

இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால் அந்த அணி வீரர்கள் அனைவரும் கடுமையாக போராடுவார்கள. ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், கம்மின்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை நடந்த 134 போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில்  இந்தியா 50-ல், ஆஸ்திரேலியா 74-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை. 135 வது போட்டியான இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.