TV

6807407510_87e96e8176_b

கச்சத்தீவு, 15.03.19:

இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள, ராமேஸ்வரத்தில் இருந்து 2,453 பக்தர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில், இந்தியா – இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னரின் சொந்த தீவாக இருந்த இந்த கச்சத்தீவு, இந்திய அரசின் ஒப்பந்தத்தால் இப்போது இலங்கை வசமாகி விட்டது. இங்குள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்திர சிலுவைப்பாதை திருவிழா, ஆண்டு தோறும் 2 நாட்கள் நடைபெறும்.

இந்த விழாவில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (15ம் தேதி) மாலை 5 மணிக்கு, நெடுந்தீவு பங்குதந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை வழிபாடு நடக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்க, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை 65 விசைப் படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளில் 415 பெண்கள் உட்பட மொத்தம் 2,453 பேர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து புறப்பட்டுச் சென்றனர். இவர்களை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வழியனுப்பி வைத்தார்.

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உட்பட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 6 கப்பல்களும், சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான பெரிய கப்பல் ஒன்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன், கச்சத்தீவு பகுதி முழுவதும் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply