TV

6807407510_87e96e8176_b

புதுச்சேரி, 19.03.19:

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க, புதுச்சேரி கடற்கரை சாலையில் 250 கூடுகள் வைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாற்றங்கள், மரங்களை அழித்தல், செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கம் என, பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் நாளுக்கு நாள் அழிந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கூரை வீடுகளும், ஒட்டு வீடுகளும் அதிக அளவில் காணப்படும். அதில், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வசிக்கும். ஆனால் தற்போது, மனித நாகரிக வளர்ச்சியால் வானளாவிய கட்டடங்கள் கட்டப்படுகிறது. இவைகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வசிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை. அத்துடன், குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களும் அழிக்கப்படுவதால், சிட்டுக்குருவிகளை காண்பதே அரிதாகி விட்டது.

இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை ஒன்று, சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த அறக்கட்டளை சார்பில், கடந்த 3 மாதங்களாக புதுச்சேரி நகர பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகம் வசிக்கும் இடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில், மிஷன்வீதி முதல் கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகமாக வசிப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் வசிக்க ஏதுவாக 250 கூடுகள் வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (17ம் தேதி) கடற்கரை சாலையில் நடந்தது. இதில், ராஜபாளையம் வன வாழ்க்கை அறக்கட்டளை நிறுவன செயலாளர் சுப்பிரமணியராஜா, பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் ராம் என்பவர் கூறியதாவது:

புதுச்சேரியில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு லாஸ்பேட்டையில் 50 இடங்களில் கூடுகள் வைக்கப்பட்டன. தற்போது அவை அனைத்திலும் சிட்டுக்குருவிகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், புதிதாக 250 கூடுகள் தயார் செய்து சிட்டுக்குருவிகள் அதிகம் வசிக்கும் இடங்களில் வைத்து வருகிறோம். இந்த கூடுகளிலும் சிட்டுக்குருவிகள் வந்து தங்கும் என்று நம்புகிறோம். வரும் காலத்தில், சிட்டுக்குருவிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த இனத்தை அழிவில் இருந்து காக்க முடியும்” என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply