TV

6807407510_87e96e8176_b

லண்டன், 04.04.19:

“லண்டனில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தாலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக கீபோர்ட் வாசிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்று, ‘ஐரோப்பாவின் முதல் தமிழ்ப் பெண் கீபோர்ட் கலைஞர்கள்’ என்ற பெருமையை பெற்றுள்ள துஷி – தனு சகோதரிகளை பாராட்டுகிறேன்” என்று, பாடகி அனுராதா ஸ்ரீராம் கூறினார்.

லண்டனில் செயல்படும் சுபரா எனும் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக கடந்த 23ம் தேதி லண்டன் ‘எல்ஸ்றீ ஹாலிடே இன்’ நட்சத்திர ஹோட்டலில் ‘சுபமான ராகங்கள்’ எனும் தலைப்பில் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பிரபல பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, துஷி – தனு சகோதரிகள் மற்றும் நண்பர்களின் இசையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பாடல்கள் பாடினார்.

இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் – பாடகிகள் மற்றும் இசைக்கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக, சுபரா நிறுவனம் சார்பில் அவர்களுக்கு விருந்து உபச்சாரம் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சுபரா நிறுவனர்களான மகாலிங்கம் சுதாகரன், ரொஷான் குரூஸ், துஷி – தனு சகோதரிகள்,  ‘ஆதவன் நியூஸ்’ அறிவிப்பாளர் எஸ்.கே.குணா ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த இசைநிகழ்ச்சி குறித்து பாடகி அனுராதா ஸ்ரீராம் கூறியதாவது:

இலங்கை யாழ்ப்பாணம், சித்தன்கேணியில் இருந்து உயர் கல்விக்காக லண்டனுக்கு குடிபெயர்ந்த செல்வத்துரை – தயாளினி செல்வத்துரை தம்பதியரின் மகள்களான துஷி – தனு ஆகியோர் லண்டனில் பிறந்து, லண்டனிலேயே வளர்ந்து, லண்டனிலேயே வாழ்பவர்கள். ‘T T & Friends’ என்ற பெயரில் இசைக்குழு நடத்திவரும் இந்த சகோதரிகள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக கீபோர்ட் வாசிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குவதுடன், ‘ஐரோப்பாவின் முதல் தமிழ் பெண் கீபோர்ட் கலைஞர்கள்’ என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.

இதற்காக துஷி – தனு ஆகியோரை நான் பாராட்டுகிறேன். இவர்களின் ஆரம்பகால வெற்றிக்கு தாய் தந்தையரே பின்னணியில் இருந்துள்ளனர். இப்போது இவர்களின் தொடர் முயற்சிக்கு, துஷித்தாவின் கணவர் மகாலிங்கம் சுதாகரனும், தனுஷாவின் கணவர் சரவணகுமார் ராஜநாதனும் முக்கிய பங்காற்றுகின்றனர். இசைக்குழுவின் மற்ற கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகளின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், எஸ்.கே.குணாவின் நிகழ்ச்சித் தொகுப்பு சிறப்பாக இருந்தது” என்று தெரிவித்தார்.

சுபரா நிறுவனர்களில் ஒருவரான ரொஷான் குரூஸ் பேசுகையில்:

“மகாலிங்கம் சுதாகரனின் வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்பட்ட சுபராவின் ‘சுபமான ராகங்கள்’ நிகழ்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, இளைய தலைமுறை கலைஞர்கள் ஒற்றுமையோடு செயல்பட்டவிதம் மிகவும் அருமையாக இருந்தது. அவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.

துஷி – தனு சகோதரிகள் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் சிறந்த பாடகியான அனுராதா ஸ்ரீராம் அவர்களோடு சேர்ந்து பணியாற்றியதை எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது. இந்த அருமையான வாய்ப்பினைத் தந்த சுபரா நிறுவனத்திற்கு நன்றி” என்றனர்.

மேலும் சுபராவின் ‘சுபமான ராகங்கள்’ இசை நிகழ்ச்சி குறித்து அதன் தொகுப்பாளரான ‘ஆதவன் நியூஸ்’ மற்றும் ‘ஆதன் டிவி’ தலைமை அதிகாரி எஸ்.கே குணா பேசுகையில், “நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஒரு சிறப்பான நிகழ்ச்சி. பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம், நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் நிறைவு வரை உற்சாகம் குறையாமல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். லண்டனிலே பிறந்து வளர்ந்த எமது கலைஞர்கள், தென்னிந்தியப் பாடல்களுக்கு இசையமைப்பது பாராட்டுக்குரியது” என்று தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.