TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 11.04.19:

இலங்கையின் பாரம்பரிய பத்திரிகையான ‘வீரகேசரி’க்கு, அதி சிறந்த ஊடக கலாச்சாரத்திற்கான 3 விருதுகள் கிடைத்துள்ளன.

உயர் ஊடக கலாச்சாரம் ஒன்றை நாட்டில் உருவாக்கும் நோக்கில், ஊடகவியலாளர்களால் ஆற்றப்படும் பணி மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், இலங்கையில் ஆண்டுதோறும் ‘ஜனாதிபதி ஊடக விருது விழா’ நடத்தப்படுகிறது.

இந்த விழாவில், தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் செயல்படும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் ஆகிய நான்கு ஊடகங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1ம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை வெளியான ஆக்கங்கள் பரிசீலிக்கப்பட்டு, தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும்.

அதன்படி, கடந்த 2018ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (10ம் தேதி) மாலை 4 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ‘வீரகேசரி’ வார இதழின் உதவி ஆசிரியர் ஆர்.ராம்குமாருக்கு, தகவல் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ரூவான் விஜேவர்தன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர், கடந்த ஆண்டின் சிறந்த பத்திரிகைக்கான விருது வழங்கினர்.

‘வீரகேசரி’ கார்ட்டூனிஸ்ட் எஸ்.தர்மதாஸுக்கு, தகவல் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ரூவான் விஜேவர்தன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர், சிறந்த கேலிச்சித்திரத்திற்கான விருது வழங்கினர். இணையத்தள ஊடகத்திற்கான பிரிவில், ‘வீரகேசரி’ இணையத்தள ஆசிரியர் பிரியதர்சன் வீரராஜனுக்கு, அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான ரூவான் விஜேவர்தன ஆகியோர், சிறந்த பல்லூடக பயன்பாட்டுக்கான விருது வழங்கினர்.

இதுதவிர, பத்திரிகைத் துறையின் மூத்த ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாஸா, வானொலி ஊடகத்தின் மூத்த ஊடகவியலாளர் கருணாரத்ன அமரசிங்க, தொலைக்காட்சி ஊடகத்தின் லுஷன் புலத்சிங்கள மற்றும் இணையத்தள ஊடகத்தின் மூத்த ஊடகவியலாளர் லக்ஷ்மன் ஜயவர்தன ஆகியோருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply