TV

6807407510_87e96e8176_b

கொல்கத்தா, 14.04.19:

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடந்த இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் குயிஸ் லின், சுனில் நரேன் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இதில் நரேன் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ராணா சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில் 21 ரன்களிலும், உத்தப்பா 0 ரன்னிலும், கேப்டன் கார்த்திக் 10 ரன்களிலும், சுப்மான் கில் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் தொடக்க ஆட்டகாரர் குயிஸ் லின் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் சதத்தை நெருங்கிய நிலையில் 51 பந்துகளில் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. பியூஸ் சாவ்லா 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

சென்னை அணி தரப்பில் தாஹிர் 4 விக்கெட்டுகளும், தாகூர் 2 விக்கெட்டுகளும், சாண்டனர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் 6 ரன்களிலும், அதிரடியாக ஆடிய டூப்ளிஸ்சி 16 பந்துகளில் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய ரெய்னா ஒருபுறம் போராட, மறுபுறம் ராயுடு 5 ரன்களிலும், அதிரடியாக ஆடிய ஜாதவ் 12 பந்துகளில் 20 ரன்களிலும், தோனி 13 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலையில், 19 வது ஓவரை சந்தித்த ஜடேஜா அந்த ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜடேஜா இரண்டாவது பந்தில் 1 ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் ரெய்னா 1 ரன் எடுக்க, நான்காவது பந்தில் 2 ரன்கள் எடுத்த ஜடேஜா சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கடைசி வரை களத்தில் இருந்த ரெய்னா 42 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்களுடனும், ஜடேஜா 17 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 7 ல் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply