TV

6807407510_87e96e8176_b

மொஹாலி, 14.04.19:

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குறித்த நேரத்தில் பந்து வீச தவறிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெடுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.  கெயில் 99 ரன்களும், கே எல் ராகுல் 18 ரன்களும்,  மயங்க் அகர்வால் 15 ரன்களும், சர்ப்பிராஸ் கான்15 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து 174 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல் 19 ரன்களில் வெளியேறினாலும், அடுத்து கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ் பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தார். அரைசதம் அடித்த கோஹ்லி 67 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் டி வில்லியர்ஸ் உடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் 19.2 ஓவர்களில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இறுதிவரை களத்தில் இருந்த டி வில்லியர்ஸ் 59 ரன்களும், ஸ்டோனிஸ் 28 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களை வீசி முடிக்க கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டது. இதனால் மிகக் குறைவான விகிதத்தில் பந்துவீசிய காரணத்திற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்தது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.