TV

6807407510_87e96e8176_b

திருக்கழுக்குன்றம், 17.04.19:

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில், உலகில் உள்ள முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவில், வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று (16ம் தேதி), தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் நிலையிலிருந்து புறப்பட்ட தேர்களை, பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய…’ என கோஷமிட்டபடி வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் குவிந்திருந்த பக்தர்கள், கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வேதகிரீஸ்வரரை வணங்கினர். தேர் சென்ற வீதிகளான மேட்டுதெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு போன்றவைகளில் பக்தர்களுக்கு நீர்மோர், தண்ணீர், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்த 5 தேர்களும், மதியம் 1 மணியளவில் கோயில் முன்புள்ள தேரடியை வந்தடைந்தன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு, வேதகிரீஸ்வரரை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, வேதகிரீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் குமரன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply