TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 23.04.19:

இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 8 குண்டுவெடிப்பு சம்பவங்களில், 6 சம்பவங்கள் தற்கொலை குண்டு மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று முன்தினம் (21ம் தேதி), 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், 290 பேர் உயிரிழந்த நிலையில், 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நடைபெற்ற 8 இடங்களில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பெரி, சினமன் கிராண்ட், ஷங்ரி-லா என 6 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், தற்கொலை குண்டு மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது என தடயவியல் நிபுணர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, குற்றப்புலனாய்வு போலீஸார் தங்களின் கீழ் எடுத்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில், பெண்களும் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பதுளை – தியதலாவை பகுதியில் நேற்று (22ம் தேதி) காலை விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையின்போது, ஒரு வீட்டில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக, விமானப் படை அதிகாரி குரூப் கெப்டன் கியான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply