TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 27.04.19:

சாய்ந்தமருது பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையை அடுத்து, 6 சிறுவர்கள் உட்பட 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற போதிலும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தொடர் சோதனைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் உடைகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், “சாய்ந்தமருது பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்த 6 ஆண்கள், 3 பெண்கள், 6 சிறுவர்கள் என, மொத்தம் 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண் ஒருவரும் சிறார் ஒருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில், பாதுகாப்பு தரப்பினருக்கு உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. மீட்கப்பட்ட 15 பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக கல்முனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது” என இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply