TV

6807407510_87e96e8176_b

சென்னை, 01.05.19:

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் ஆடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியில் 2ம் இடத்தில் உள்ளது. ஆனால் சென்னை அணி கடந்த போட்டியில் தனது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் நிகர ரன்ரேட் விகிதம் சற்று சரிந்ததால் 16 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

அதேவேளையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்து 6 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாட தகுதி பெற்றது. 16 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி நிகர ரன்ரேட் விகித அடிப்படையில் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி லீக் ஆட்டத்தை முதல் இடத்துடன் நிறைவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை கேப்டன் தோனி மிகப்பெரிய பலமாக உள்ளார். தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற் தடுமாறி வருகிறது. சன்ரைசஸ் அணியுடனான முதல் போட்டியில் தோனி இல்லாத நிலையில் பேட்டிங்கில் சொதப்பி தோல்வியடைந்த சென்னை அணி, தனது கடைசி ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 109 ரன்களுக்கு சுருண்டதால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை டெல்லி அணியிடம் பறிகொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்நிலையில் காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்று களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் சென்னை அணி பலம் பெறும். மேலும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே சொந்த மண்ணில் தகுதி சுற்றின் முதல் ஆட்டத்தை விளையாட முடியும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புவதில் தீவிர கவனம் செலுத்தக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளில் ஆடி 8 வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முதலிடத்தில் உள்ளது. தனது கடைசி 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவண், ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். எனினும் ரன்குவிக்க கடினமாக திகழும் சேப்பாக்கம் ஆடுகளம் இவர்களுக்கு சவால் தரக்கூடும்.

கடந்த மார்ச் 26-ம் தேதி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுப்பதில் டெல்லி அணி முனைப்பு காட்டக்கூடும். அதேவேளையில் மீண்டும் ஒரு முறை டெல்லி அணியை வீழ்த்துவதிலும், லீக் சுற்றில் தனது சொந்த மைதானத்தில் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்வதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரம் காட்டக்கூடும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply