TV

6807407510_87e96e8176_b

விழுப்புரம், 16.05.19:

வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பலியான சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜி(60). வெல்டிங் பட்டறை உரிமையாளரான இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி(52) என்ற மனைவியும், கோவர்த்தனன் (30) கௌதம் (27)  என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கோவர்த்தனுக்கு திருமணமாகி தீபகாயத்ரி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் ராஜி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது மனைவி மற்றும் இரண்டாவது மகன் ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தபோது, நடு இரவில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் படுக்கை அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தை ஆன் செய்துவிட்டு படுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் வெடி சத்தத்தை கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராஜி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். மேலும் அறை முழுவதும் தீப்பிடித்து புகை மண்டலமானதால் அவர்கள் 3 பேரும் தீ மற்றும் புகை மூட்டத்தின் பிடியில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ராஜி வீட்டின் வராண்டா பகுதியில் விழுந்து இறந்து கிடந்தார்.

இதற்கிடையே படுக்கை அறையில் இருந்து வெளியான புகை நெடியால் பக்கத்து அறையில் படுத்திருந்த ராஜியின் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீபகாயத்ரி ஆகியோர் பதற்றத்துடன் ஓடி வந்தனர்.அப்போது படுக்கை அறையில் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply