TV

6807407510_87e96e8176_b

நீலகிரி, 17.05.19:

பந்தலுார் அருகேயுள்ள காபி காடு கிராமத்தில், காட்டு யானைகளிடமிருந்து வீடுகளைக் காக்க மக்கள் வித்தியாசமான ஐடியா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே உள்ளது காபி காடு கிராமம். இரண்டு பக்கமும் வனப்பகுதியைக் கொண்டதுடன், யானைகளின் முக்கிய வழித்தடங்களை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது இந்த கிராமம். அத்துடன் இங்கு, தண்ணீர் வசதியும் தாராளமாக உள்ளது. இதனால், காட்டு யானைகள் இங்கு வந்து தாகம் தீர்த்துச் செல்வது வாடிக்கை. அப்படி வரும் யானைகள் சில சமயங்களில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை உடைத்து உள்ளே சென்று மக்கள் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை தின்றுவிட்டு சென்று விடுகின்றன.

இந்நிலையில், தண்ணீர் அருந்த வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இப்பகுதி மக்கள், ஆங்காங்கே கண்ணாடி பாட்டில்களைக் கட்டித் தொங்க விட்டுள்ளனர். காற்று வீசும்போது பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று உரசி எழுப்பும் ஓசையால், யானைகள் பயந்து இப்பகுதிக்கு வருவதில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

எங்கள் கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகம். யானைகளால் தாக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தண்ணீர் அருந்த வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை நாசம் செய்துவிட்டு சென்று விடுகின்றன. எனவே, வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த நூதன முறையை பயன்படுத்துகிறோம். இது, நல்ல பயன் தருகிறது’’ என்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply