TV

6807407510_87e96e8176_b

புதுச்சேரி, 17.05.19:

புதுச்சேரி வனத்துறை வளாகத்தில் பராமரிக்கப்படும் விலங்குகளை கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்க, அவற்றை குளிர்ந்த நீரால் குளிப்பாட்டி வருகின்றனர்.

மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டதாலும், அங்குள்ள நீர் நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு போனதாலும், அங்கு வசித்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் பகுதிக்கு படையெடுக்கின்றன. இப்படி, புதுச்சேரி நகருக்குள் வந்த மான்கள், மலைப்பாம்புகள், பாம்புகள், மயில்கள் போன்றவை பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் பிடித்து வரப்பட்டு, வனத்துறையினரால் பராமரிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர், இவைகள் மீண்டும் வனப்பகுதியில் விடப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது, புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள வனம் மற்றும் வனவிலங்கு இயக்குனரகம் கட்டுப்பாட்டில் 11 மலைப்பாம்புகள், 11 மயில்கள், 14 மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு மலைப்பாம்பு 13 அடி நீளத்தில், சுமார் 35 கிலோ எடை கொண்டதாக உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாம்புகள் தானாகவே இறந்துவிடும். எனவே அவற்றை பாதுகாக்க, பாம்புகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளைச் சுற்றிலும் தண்ணீர் ஊற்றி குளிர்விக்கப்படுகிறது. அத்துடன், பாம்புகள் மீதும் அவ்வப்போது குளிர்ந்த நீர் ஊற்றி குளிப்பாட்டப்படுகிறது.

அதுபோல், மான், மயில் போன்றவைகளுக்கு தர்பூசணி, கிர்ணிப்பழம், வெள்ளரிப்பழம் என, வெயிலுக்கு இதமாகவும், உடலை குளிர்ச்சியூட்டும் வகையிலான உணவுகள் வழங்கப்படுகின்றன.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply