TV

6807407510_87e96e8176_b

திருத்துறைபூண்டி, 17.05.19:

திருத்துறைப்பூண்டி அருகே, ஆற்றங்கரையில் கிடந்த ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு வழங்கும் உதவித்தொகை, மானியம் உள்ளிட்ட சலுகைகளை ஏழை, எளிய மக்கள் வங்கிகளின் மூலம் நேரடியாக பெற்று பலன் அடையும் வகையில், ஆதார் அடையாள அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், திருத்துறைப்பூண்டி அருகே ஆயிரக்கணக்கான ஆதார் அட்டைகள் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தேவர்பண்ணை முல்லியாற்றின் ஓரத்தில் நேற்று (மே 16) காலை இரண்டு மூட்டைகள் கிடந்துள்ளன. இதைப்பார்த்த சிலர், அந்த மூட்டைகளை பிரித்து கீழே கொட்டியபோது, அதில் இருந்து ஏராளமான ஆதார் அட்டைகள் விழுந்துள்ளன. இந்த அட்டைகளில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆதிரங்கம், கட்டிமேடு, வடபாதி, தென்பாதி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் முகவரி இருந்துள்ளன. தாங்கள் விண்ணப்பித்த ஆதார் அட்டை இப்படி குப்பைபோல் வீசப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் போலீஸார், அங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதார் அட்டைகளை கைப்பற்றினர். இதுகுறித்து கட்டிமேடு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், ஆதார் அட்டைகளை இப்படி வீசிச் சென்றது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஜா புயலின்போது தொலைந்த ஆதார் அட்டைக்கு மாற்றாக விண்ணப்பித்திருந்த ஆயிரக் கணக்கான ஆதார் அட்டைகள் ஆற்றங்கரையில் வீசப்பட்டிருந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply