TV

6807407510_87e96e8176_b

மும்பை, 17.05.19:

வேறு நாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வாகி புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடர் நடப்பது போன்று, மேற்கிந்தியத்தீவுகளில் கிரீபியன் கிரிக்கெட் லீக் (சிபிஎல்) தொடர் நடைபெற்று வருகிறது. பல நாடுகளை சேர்ந்து கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இந்த தொடரில், முதன் முறையாக இந்தியாவிலிருந்து ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் எந்த ஒரு இந்திய வீரரும் வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியதில்லை. முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் இந்த லீக் தொடரில் விளையாட இந்திய வீரர் இர்பான் பதான் தேர்வாகி வரலாறு படைத்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு கரீபியன் லீக் கிரிக்கெட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த லீக் தொடரில் விளையாடுவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அமைப்பிடம் பதான் தடையில்லா சான்று பெற்றுவிட்டாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.

மேற்கிந்தியத்தீவுகளில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடும், 20 நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இர்பான் பதான் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில், மொத்தம் 6 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் இந்த தொடரில், பதான் எந்த அணியில் இடம் பெறுவார் என்பது இனிமேல்தான் தெரியவரும். மேலும் இந்த தொடரில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன், நியூசிலாந்தின் மெக்கல்லம் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடமல் இருந்த பதான் முதல்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாட உள்ளார். மேலும் இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள பதான், 300 விக்கெட்டுகளையும், 2,800 ரன்களையும் குவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்துள்ளார் பதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை சிஎஸ்கே, டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், புனே சூப்பர் ஜெயின்ஸ்ட், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளில் பதான் விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் பராடோ மாநிலத்துக்காக விளையாடி வந்த பதான், அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக விளையாடி, அங்குள்ள மாநிலஅணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply