TV

6807407510_87e96e8176_b

அமெரிக்கா, 22.05.19:

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 400 பேரின் கல்விக்கடன் தொகையான 279 கோடி ரூபாயை தானே செலுத்துவதாக அறிவித்து, மாணவர்களை திக்குமுக்காடச் செய்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ராபர்ட் எஃப் ஸ்மித். 56 வயதாகும் இவர், 2000ம் ஆண்டு ‘விஸ்டா ஈக்விட்டி பார்னர்ஸ்’ என்ற முதலீட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதன் மூலம், பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் உலக பில்லினியர்ஸ் பட்டியலில், இவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், சுமார் 34,000 கோடி ரூபாய்) என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மோர்ஹவுஸ் ஆண்கள் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ராபர்ட் எஃப் ஸ்மித் உரையாற்றினார். அப்போது, அந்தக் கல்லூரியில் படித்து வரும் 400 மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக்கடன் தொகை முழுவதையும் தானே செலுத்துவதாகக் கூறி, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார்.

தொழிலதிபர் ராபர்ட் எஃப் ஸ்மித்தின் இந்த அறிவிப்பால், அங்கு கூடியிருந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் அவர்கள், பலத்த கரகோஷம் எழுப்பி, அவருடைய அறிவிப்பைக் கொண்டாடி தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். 400 மாணவர்கள் செலுத்த வேண்டிய மொத்த கல்விக்கடன் தொகை 40 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், சுமார் 279 கோடி ரூபாய்) எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கறுப்பின மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், சுமார் 10.5 கோடி ரூபாய்) உதவித் தொகையாக அறிவித்தார்.

இதுகுறித்து ராபர்ட் எஃப் ஸ்மித் கூறுகையில், “கடந்த 8 தலைமுறைகளாக எங்கள் குடும்பம் இந்த நாட்டில் வசித்து வருகிறது. இந்த நாடுதான் எங்கள் குடும்பம் இந்த அளவு வளர காரணமாக இருந்தது. எனவே, மாணவர்களின் கடனை முழுமையாகச் செலுத்த எனது குடும்பம் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply