TV

6807407510_87e96e8176_b

லண்டன், 04.06.19:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை தென் ஆப்பிரி்க்கா அணியுடன் மோத உள்ள நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நேற்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி தொடங்கிய உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை தென் ஆப்பிரி்க்கா அணியுடன் மோத உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இதுவரை தான் மோதிய இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், நாளை சவுத்தாம்டன் நகரில் நடைபெறும் மூன்றாவது போட்டியில், இந்திய அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டிக்கு ஆயத்தம் ஆகும் வகையில் இந்திய வீரர்கள் நேற்று ரோஸ் பவுல் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அதிகாரிகள் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்று, அவரிடம் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்சுற்றுச் சோதனையில் பும்ராவின் சிறுநீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த 45 நிமிடங்களுக்குப்பின் பும்ராவின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஊக்கமருந்து சோதனை செய்ததால் பும்ரா சற்று பதற்றத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. உலககோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, உலக அளவில் தனது வேகப்பந்துவீச்சில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ராவின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பார்க்கப்படும் நிலையில், அவருக்கு தற்போது ஊக்கமருந்து சோதனை நடந்துள்ளது. மேலும், பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை எடுக்கப்பட்டதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாத நிலையில், அடுத்ததாக வேறு எந்த வீரருக்கும் சோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து அணி நிர்வாகம் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply