TV

6807407510_87e96e8176_b

திருச்சி, 04.06.19:

திருச்சியில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த காவலர் மரணம் அடைந்துள்ள நிலையில், அவரை அடித்துக் கொன்றதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்,

கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (36). இவருக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகிச் சரிவர பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். மேலும’ போதை பழக்கம் காரணமாக தமிழ்ச்செல்வன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி தமிழ்செல்வன் திருச்சி கே.கே.நகரில் லைப் கேர் சென்டர் டிரஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் குடி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காகக் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 1ஆம் தேதி அவர் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்த லைப் கேர் சென்டர் டிரஸ்ட்  அவரது உடலைக் கடலூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து இறுதிச் சடங்கின்போது அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இருப்பினும் ஊர் வழக்கப்படி உறவினர்கள் அவரது உடலை உடனடியாக புதைத்துவிட்டனர்.

இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட உறவினர்கள் நேற்று (ஜூன் 3) மதியம் கே.கே. நகரில் உள்ள லைப் கேர் சென்டர் டிரஸ்டுக்கு சென்று நிர்வாகிகளிடம் விவரம் கேட்க முயன்றுள்ளனர். அப்போது அதே மையத்தில் 28பேர் சங்கிலியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சோர்வுற்று மயங்கிக் கிடந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழ்ச்செல்வன் உறவினர்கள் கேட்டபோது போதை மறுவாழ்வு சிகிச்சை மைய நிர்வாகிகள் உரிய பதில் கூற மறுத்ததுடன், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து தமிழ்ச்செல்வன் உறவினர்கள் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அங்குச் சிகிச்சை பெறுபவர்களை சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்ததாகவும், துன்புறுத்தலினாலேயே தமிழ்ச்செல்வன் இறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் திடீரென மரணமடைந்துள்ளதாகவும், அதேபோன்ற 10க்கும் மேற்பட்டவர்கள் இந்த மையத்தில் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தவறான சிகிச்சை அளித்த ரமேஷ், பிரகாஷ் உள்ளிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மையத்தில் உள்ள 28 பேரையும் மீட்டு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், லைப் கேர் சென்டர் டிரஸ்ட் நிர்வாகிகளைத் தேடி வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply