TV

6807407510_87e96e8176_b

தர்மபுரி, 07.06.19:

சாக்பீசில் வேகமாக சிற்பம் செதுக்கிய மாணவருக்கு, உலக சாதனை விருது வழங்கி மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் கவியரசு (19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான இவர், சாக்பீசில், பழங்கால கோயில்கள், தெய்வங்களின் உருவங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்குவதில் சாதனை படைத்துள்ளார். கவியரசுவின் சிற்பக்கலை திறன் குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, உலக சாதனைக்கான சிற்பக்கலை போட்டியில் பங்கேற்க கவியரசுக்கு கலெக்டர் மலர்விழி உரிய வழிகாட்டுதல் வழங்கினார். அதில் கலந்துகொண்ட கவியரசு, 4 நிமிடம் 29 நொடிகளில், 6 மில்லி மீட்டர் அளவில் ஒரு புத்தர் சிலையை சாக்பீசில் செதுக்கினார். மிகக்குறுகிய நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த புத்தர் சிலை சிற்பம், உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்ததை தொடர்ந்து, அதற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற கவியரசு தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கவியரசுக்கு, சாதனை படைத்ததற்கான பாராட்டு சான்றிதழை கலெக்டர் மலர்விழி வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து கவியரசு கூறுகையில், “சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவதிலும், சாக்பீஸ் மற்றும் பென்சிலில் சிற்பங்களை செதுக்குவதிலும் ஆர்வம் இருந்தது. இதனால், பல்வேறு வகையான சிற்பங்களை வடிவமைத்தேன். என்னிடம் உள்ள திறமையை கண்டறிந்த கலெக்டர், உலக சாதனைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிறுவனத்திற்கு எனது படைப்புகளை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்மூலமாக எனக்கு, உலக சாதனைக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply