TV

6807407510_87e96e8176_b

ஈரோடு, 17.06.19:

மாணவர்கள் குறைவால் தாங்கள் படித்த அரசுப்பள்ளி மூடப்படுவதை தவிர்க்கும் விதமாக, முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து இரண்டு வேன்களை வாங்கி கிராமப்புற மாணவர்களை இலவசமாக பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பாசூரில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவர் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ‘பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை’ ஒன்றை துவங்கினர். இதன் மூலம் திரட்டிய நிதியைக்கொண்டு, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வேன்கள் வாங்கி கிராமப்புற மாணவர்களை தினமும் இலவசமாக பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

இது குறித்து, அறக்கட்டளை மேலாளர் சங்கர் (34) கூறியதாவது;

1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 168 பேர் படித்தனர். இந்த ஆண்டு, மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழே சென்றது. இதனால், பள்ளிக்கூடம் மூடப்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நாங்கள் ஆசிரியர்களைச் சந்தித்து விசாரித்தபோது, போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தெரியவந்தது. எனவே, பள்ளியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து இதுகுறித்து பேசினோம்.

அப்போது, மாணவ – மாணவியரை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வர இலவச வேன் வசதி ஏற்படுத்த முடிவு செய்தோம். இதையடுத்து, முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ‘பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை’ ஒன்றை துவங்கினோம். இதன் மூலம் திரட்டிய நிதியைக் கொண்டு வேன் ஒன்றை வாங்கி, பாசூரை சுற்றி 13 கி.மீ. வரை சென்று மாணவ – மாணவியரை அழைத்து வந்தோம்.

நடப்பு கல்வியாண்டில், நாமக்கல் மாவட்ட மாணவ – மாணவியரும் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால், நாமக்கல் மாவட்டத்தில் 50 கி.மீ. வரை சென்று வரும் வகையில் இந்த மாத தொடக்கத்தில் மற்றொரு வேன் வாங்கி இயக்கி வருகிறோம். இரு வாகனங்களும், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. மற்றொரு வேன் வாங்கும் எண்ணமும் உள்ளது. எங்கள் சேவையை அறிந்த பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர், எங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply