TV

6807407510_87e96e8176_b

கடும் வெள்ளம் காரணமாக வாழ்விடத்தை இழந்த புலி ஒன்று, வீட்டிற்குள் தஞ்சமடைந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் பெய்த கடும் மழை காரணமாக, புகழ்பெற்ற தேசிய பூங்காவான காஸிரங்கா சரணாலயம் 90 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், ஆயிரக்கணக்கான சிறு விலங்குகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தன. யானை, மான்கள் உள்ளிட்ட விலங்குகள் மேடான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன.

வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் விலங்குகளை வனக்காப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்டு வருகின்றனர். வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாததால் காடுகளை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் விலங்குகள், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில், காஸிரங்கா பூங்கா அருகே உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, படுக்கை அறையில் புலி ஒன்று படுத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், தனது செல்போனில் அந்த புலியை படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சமடைவதற்காக ஊருக்குள் வரும் விலங்குகள், பசிக்காக மனிதர்களை தாக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply